தமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள்

May 8, 2015 |

தமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள்

– செந்தமிழ் வேள்விச்சதுரர்

மு.பெ.சத்தியவேல் முருகனார் B.E.,M.A.,M.Phil

ஓர் ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணையும் சடங்கினைத் தமிழில் திருமணம் என்று கூறுகிறோம். சமஸ்கிருதத்தில் இதனை விவாஹம் என்கின்றனர். திருமணம் என்ற சொல்லே ஆழமான பொருளை உள்ளடக்கியது. ஒரு மலரின் மணம் அதனுள்ளேயே இருந்தாலும் மலர் மொட்டாக இருக்கும்போது அது தெரிவதில்லை. ஆனால் மொட்டு மலர்ந்த பின் மணம் வீசுவதை உணர்கிறோம். அது போல இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வம் என்கிற விதியினால் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்தாலும் இருவரும் இணையும் வரை அது தெரிவதில்லை. உரிய நேரம் வரும்போது அந்த தெய்வ விதி மலர்ந்து மணம் பரப்புவதால் இந்த நிகழ்வை திருமணம் என்றனர் தமிழர். திரு என்ற சொல்லுக்குத் தெய்வத்தன்மை என்பது பொருள். மணம் என்பதன் பொருள் வெளிப்படை.

ஆனால் விவாஹம் என்ற வடசொல்லின் பொருள் கடத்திக் கொண்டு செல்லுதல். அதாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஓர் ஆண் கடத்திக் கொண்டு செல்லுதல் என்பது பொருள். இது காட்டுமிராண்டித் தனத்தின் எச்சம் என்பது வெளிப்படை.திருமுறைத் திருமணத்தில் எல்லாம் வல்ல பரம்பொருளினை உரிய மந்திரங்களினால் எழுந்தருளச் செய்து, வேள்வி ஆற்றி, தீ மற்றும் கலசத்தில் முன்னாக்கி இறைவன் முன் திருமணம் செய்விக்கப்படுகிறது. ஆனால் சமஸ்கிருத திருமணச் சடங்குகளில் இறைவனுக்கு இடமே இல்லை; பதிலாக தேவர்கள் தான் முன்னாக்கம் செய்யப் பெறுகிறார்கள். எனவே சமஸ்கிருத திருமணம் நாத்திகமானது; திருமுறைத் திருமணமோ ஆத்திக அடிப்படை அமைந்து புனிதமாகப் பொலிவது.

சமஸ்கிருத திருமணச் சடங்குகளில் ஒலிக்கப்படும் மந்திரங்கள் எவருக்கும் புரிவதில்லை என்பதோடு ஓதுகிறவர்க்கே பொருள் புரிவதில்லை; காரணம், சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லாத இறந்த மொழி. ஆனால் திருமுறைத் திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்கள் தூய தமிழில் எல்லோருக்கும் புரிவதாக இருக்கின்றன. ஆகவே இவ்வகை திருமணங்கள் பொருள் உடையனவாக இருக்கின்றன.

சமஸ்கிருதத் திருமணச் சடங்குகளில் காசியாத்திரை, நாமகரணம், ஜாதகர்மம், அன்னப்பிராசனம், சூடா-கர்மா மற்றும் மதுவர்க்கம் போன்ற பொருளற்ற, அறிவுக்கிசையாத, அறநெறிக்கு மாறான, ஆபாசமான, ஆட்சேபணைக்குரிய சடங்குகள் உள்ளன. ஆயின், திருமுறைத் திருமணத்தில் அவற்றின் தாக்கம் சற்றேனும் கிடையாது.

சமஸ்கிருதத் திருமணத்தில் ஒரு மந்திரம் பயிலுகிறது. அது என்ன சொல்கிறது என்றால், மணமகள் ஏற்கெனவே அடுத்தடுத்து மூன்று பேர்களுக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அம்மூவர் சோமதேவன், கந்தர்வன், அக்கினி தேவன் என்ற தேவர்கள் என்றும், மணவரையில் அமர்ந்துள்ள மணமகன் அவளுக்கு நான்காவது கணவன் என்றும் கூறுகிறது. இது கேட்கவே குடலைப் பிடுங்குகிறதல்லவா? குறிப்பாக மணமகளுக்கு இது எப்படி இருக்கும்? இது போன்ற ஆபாசமான மற்றும் ஆட்சேபணைக்குரிய மந்திரங்களை திருமுறைத் திருமணங்களில் நினைத்தும் பார்க்க முடியாது.

சமஸ்கிருதத் திருமணங்களில் தாலிகட்டும் சடங்கே கிடையாது என்று ரிக் வேதத்திலிருந்து திருமணச் சடங்குகளைத் தொகுத்து வழங்கும் ஏகாக்கினி காண்டம் என்ற நூல் கூறுகிறது. இந்நூல்களின் உரையாளர்கள் தாலிகட்டுதல் என்பது ஆரிய இனத்தின் வழக்கமல்ல என்றும், இது திராவிட இனத்தின் வழக்கம் என்றும், பிற்காலத்தில் இச்சடங்கு ஆரிய இனத்திலும் நுழைந்து விட்டது என்றும் தெளிவுபட எடுத்துரைக்கிறார்கள். அதனால் மாங்கல்யம் தந்துநானேனா என்று தற்காலத்தில் ஒலிக்கப்படும் சொற்கட்டு பிற்காலத்தில் பெயர் தெரியாத எவரோ இயற்றியது என்றும் உறுதிப்படுத்துகிறார்கள்.

ஆனால் தமிழர் திருமணத்தில் தாலி கட்டுவதே முக்கிய சடங்கு. அது இன்றேல் அது திருமணமாகவே கருதப்படாது. வரலாற்றில் வாராத முற்காலத்தில் அல்லது தற்காலத்தில் வாலிபர்களில் சிலர் பருவப் பெண்களைக் கூடிவிட்டுப் பின்னர் அவளோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பொய் கூறி தப்பித்துக் கொண்டனர். அந்தப் பெண்ணுக்கும் தம்மிருவரிடையே உள்ள தொடர்பை நிரூபிக்க முறையான சான்றுகள் இல்லாததால் அவள் சொல் அம்பலம் ஏறாமல் பாதுகாப்பின்றிப் பரிதவித்தாள். இந்நிலை மாற திருமணம் என்ற சடங்கு சான்றோர்களால் ஏற்படுத்தப்பட்டு பெண்ணும், சமூகமும் பாதுகாக்கப்பட்டது என்று தொல்காப்பியம் என்கிற பழம்பெரும் இலக்கண நூல் எடுத்தியம்புகின்றது. இதன் மூலம், மணமகன், இந்தப் பெண்ணை என் உயிர் மூச்சு உள்ள வரை பிரியாமல் காப்பேன் என்று பனை ஓலையில் உறுதிமொழி எழுதிக் கையொப்பம் இடுவான். இவ்வோலை சுருட்டப்பட்டு ஓர் உலோகக் குழையில் இடப்பட்டு, அதனைக் கயிற்றால் கட்டி அந்தக் கயிற்றை மணமகன் மணமகளுடைய கழுத்தில் கட்டுவான். இதுவே தாலி. தாலம் என்ற சொல்லுக்குப் பனை ஓலை என்று பொருள். தாலத்தால் கட்டப்படுவது தாலி எனக் கூறப்பட்டது.

தாலி பெண்ணுக்கும், சமூகத்திற்கும் பாதுகாப்பு அளிப்பதால் இக்கருத்தைத் தழுவி சுமேரிய-அக்காடிய மொழிகளில் இச்சொல் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன்வழி இலத்தினுக்கும் ஆங்கிலத்திற்கும் சென்று பாதுகாப்பு அளிக்கும் குழைகளுக்கு தாலிஸ்மேன் என்று பெயர் வந்தது.

தாலி என்பதன் இந்த உள்ளுறையை அறியாத ஆரியர்கள் தம் திருமணச் சடங்குகளில் இதை நுழைத்த போது மணமகளுக்கு இரண்டு தாலிகளைக் கட்ட வைத்தார்கள். ஒன்று வேட்டாத்துத் தாலி என்றும், மற்றது புக்காத்துத் தாலி என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு இரு தாலிகள் என்பது இரு கணவர்கள் என்று பொருள் தந்து தாலியின் பொருளுக்கே இழுக்கு சேர்த்து அச்சடங்கை ஆபாசமாக்கிவிடுகிறது.

சமஸ்கிருதத் திருமணச் சடங்குகளின் கருப்பகுதி சப்தபதி என்பதாகும். இதன்படி மணமகன், மணமகளை ஏழடி எடுத்து வைத்து நடக்கச் செய்வான். ஒவ்வோரடிக்கும் ஒரு மந்திரம் உண்டு. அதில் ஒரு மந்திரம் இப்படிக் கூறுகிறது.

“நாம் இருவரும் நல்ல நண்பர்கள். மணமகனாகிய நான் நம் நட்பிற்கு எவ்விதத் துரோகத்தையும் செய்ய மாட்டேன்; மணமகளாகிய நீயும் அப்படியே எவ்விதத் துரோகத்தையும் செய்து நம் நட்பை முறித்து விடக்கூடாது.”

இந்த மந்திரம் மணமகள் எதிர்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் மணமகனுக்குத் துரோகம் செய்து ஓடி சோரம் போகக் கூடும் என்றும் பொருள் தருவதாக உள்ளது. திருமண மேடையிலேயே மணமகளை இவ்வாறு சித்தரிப்பது அவளை இத்தனை தூய்மையற்றவளாக அவமதிப்பது ஆகும். இவ்வாறு சித்தரித்தால் அவர்களின் திருமண உறவு எப்படி விளங்கும்? மேலும், தம்பதியர் என்பது வேறு; நண்பர்கள் என்பது வேறு. இரண்டும் ஒன்றாக முடியாது. இது முற்றிலும் அறிவுக்கும் பொருந்தாதது. மணமகளைப் பார்த்து மணமகன் என்னை விட்டு ஓடிப் போகாதே என்பது எவ்வளவு அநாகரியமான சொல்.

ஆனால் தமிழ்மகள் கற்பை உயிரினும் சிறந்ததாக எண்ணுவாள் என்று தொல்காப்பியம் கூறுவது எத்துணை சாலச் சிறந்தது!

சமஸ்கிருதத் திருமணத்தில் மதுவர்க்கம் என்ற சடங்கு ஒன்று உண்டு. இது விருந்தைக் குறித்தது. ஏகாக்கினி காண்டம் இவ்விருந்தின் பொருட்டு பசுங்கன்றுகளை வெட்டி விருந்திடச் சொல்கிறது. நாளாவட்டத்தில் இக்கொடுமை மறைய பசுங்கன்றுகளுக்குப் பதிலாக மணமக்கள் தம்மிடையே கன்றுகளின் தலையாக எண்ணி தேங்காய்களை உருட்டி விளையாடுவது வழக்கில் வந்தது; ஆனால் மந்திரம் என்னவோ மாறவில்லை. இத்தகைய கொடுஞ் சடங்குகள் திருமுறைத் திருமணத்தில் எண்ணிப் பார்க்கவும் இயலாது.

இது போன்ற மேலும் பல ஒவ்வாத சடங்குகள் சமஸ்கிருதத் திருமணத்தில் உள்ளன. இவை இல்லாமல் திருமுறைத் திருமணங்கள் பல்வேறு சிறப்புகளுடன் பொலிகின்றன. இது பற்றி மேலும் அறிய கீழ்க்காணும் நூல்களைப் படிக்கவும்.

 

  • 1. வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்- செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
  • 2. இந்து மதம் எங்கே போகிறது?- அக்னிஹோத்ரம் தாதாச்சாரியார்.

 

ஆங்கிலத்தில் அறிய….

திருமுறை திருமணம்

நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா-ஜோதிகாவின் திருமண புகைப்படங்கள்

 

தமிழ் திருமுறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தவர் “செந்தமிழ் வேள்விச் சதுரர் மு. பெ. சத்தியவேல் முருகனார்” அவர்கள் .

செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவமுரைத் தானே

                                                – திருமூலர்

திருமணம் முதலான இல்லச் சடங்குகளுக்கும் பயிற்சிக்கும்

தொடர்புகொள்க

தமிழ் வழிபாட்டு பயிற்சி மையம்

தொடர்பாளர்::- ச.மு. தியாகராசன், கைபேசி ::- 93809 19082, 94440 42770

Posted in: Uncategorized

Comments are closed.