முருகவேள் பன்னிரு திருமுறைத் திரட்டு

single_mur-copy.jpgசிவபெருமானுக்குப் பன்னிரு திருமுறை  இருப்பது  போல  முருகவேள் பன்னிரு திருமுறை  என்று  ஒரு திருமுறைத் திரட்டு  உண்டு  தெரியுமா  என்று  சொன்னால்  பலரும்  ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அதைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள்.

 விரம் தானே, கேளுங்கள் : 

  1.  திருப்பரங்குன்றம் திருப்புகழ் - முதல் திருமுறை
  2.  திருச்செந்தூர் திருப்புகழ்    - இரண்டாந் திருமுறை
  3. திருவாவினன்குடி திருப்புகழ்  - மூன்றாந் திருமுறை
  4. திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் - நான்காந் திருமுறை
  5. குன்றுதோறாடல் திருப்புகழ் - ஐந்தாந்  திருமுறை
  6. பழமுதிர்சோலை திருப்புகழ் - ஆறாந்  திருமுறை
  7. பொதுத் திருப்புகழ் பாடல்கள் - ஏழாந் திருமுறை
  8. கந்தரலங்காரம் - கந்தரந்தாதி - எட்டாந் திருமுறை
  9. திருவகுப்பு - ஒன்பதாந் திருமுறை
  10. கந்தரனுபூதி - பத்தாந் திருமுறை
  11. நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர்,   முதலானவர்கள் பாடல்கள்    - பதினோராந் திருமுறை
  12. முருகனடியார்கள் வரலாறு ஆகிய   சேய்த்தொண்டர் புராணம் - பன்னிரண்டாந் திருமுறை

 இவ்வாறாக முருகவேள் பன்னிரு திருமுறை வகுக்கப் பட்டிருக்கிறது. வகுக்கப் பட்டிருக்கிறதா?

வகுத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? வகுத்தவர் வேறு யாரும் இல்லை, திருப்புகழ் ஏடுகளை வாழ்நாளெல்லாம் தேடித் தேடி தொகுத்துப் பதிப்பித்த தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்கள் தாம்!

அது சரி! இங்கு கூறப்படுகிற பதினோராந் திருமுறை வரை பாடிய புலவர்கள், மன்னிக்கவும், செம்புலப் புலவர்கள் முன்னமேயே நாடறிந்த செம்புலப் புலவர்கள். அருணகிரிநாதர், நக்கீரர்,பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடனார் இவர்கள் எல்லாம் நாடறிந்த செம்புலப் புலவர்கள் அல்லவா?

ஆனால் சேய்த்தொண்டர் புராணம் என்ற முருகவேள் பன்னிரண்டாந் திருமுறை பாடிய செம்புலப் புலவர் யார்? அது ஒரு பெரிய கதை!

தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் மேற்படி முருகவேள் நூல்களை எல்லாம் வகுத்துக் கொண்டு வந்திருக்கிறார். இறுதியில் சிவபன்னிரு திருமுறையில் பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணம் இருப்பது போல முருகனடியார்கள் புராணம் ஒன்று இருந்தால் அல்லவா முருகவேள் பன்னிரு திருமுறை நிறைவு பெறும் ?

சேய் ஆகிய முருகனது தொண்டர்கள் புராணம், அதாவது சேய்த்தொண்டர் புராணம் யார் பாடுவது? இந்தக் கவலை தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளைக்கு வந்து விட்டது. அவரே நல்ல பாக்கள் புனையும் வல்லமை படைத்தவர் தாம். இருந்தாலும் அதில் அவருக்கு ஒரு தயக்கம் இருந்தது போலும்!

இப்படித் தான் ஒரு பாண்டியன் ஒரு நல்ல பொருள் நூலுக்காகக் கவலைப்பட்டான் என்பது வரலாறு. புலவர்கள் கடும்பஞ்சமான வற்கடத்தின் காரணமாக பாண்டிநாட்டை விட்டு அயல்நாடுகளுக்குச் சென்று மீண்டும் மழையால் நாடு தழைத்த போது பாண்டி நாட்டிற்கு வந்தனராம். ஆனால் தொல்காப்பியத்தில் கூறப்படும் பொருளதிகாரம் மட்டும் கிடைக்கவில்லையாம். எழுத்தும், சொல்லும், பொருளதிகாரத்திற்கு அல்லவா ஏற்பட்டன? அப்பொருளதிகாரம் இன்றேல் எதுவும் இன்று என்று அவன் கவலைப் பட்டபோது பொருள் நூலான இறையனார் களவியல் என்ற நூல் மதுரைச் சொக்கனின் பீடத்தில் எழுந்ததாம். மகிழ்ந்த மன்னன் இந்நூலுக்கு உரை வேண்டுமே என்று கவலையுற்றானாம். மீண்டும் இறைவன் கருணை புரிய உருத்திரசன்மன் என்ற ஊமைக் குழந்தை தேர்வு செய்ய இறையனார் களவியல் உரையாகிய நக்கீரர் உரை கிடைத்தது என்பர்.

இவ்வாறு  நல்ல நூலுக்காக நல்லவர்கள் கவலைப்படும் போதெல்லாம் அதைக் கூட்டிக் காட்டித் தருவது இறைவனது இயல்பல்லவா?

அது போல தணிகைமணியாரின் தணியாத கவலையைத் தணிக்க வேண்டி இறைவன் சுந்தரர் உலாஎன்ற ஒரு நூலை அவருக்குக் காட்டி அருளினான். சுந்தரர் உலாஎழுதியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார்.

சுந்தரர் உலா நூலைப் படித்த பிள்ளைவாள் அதில் சொக்கிப் போனார். நூலின் நடையும்,  அழகும், சுவையும், பொருளும்    நூலாசிரியரான  சொக்கலிங்கனார்  ஒரு வரகவி என்பதை உறுதி செய்தது. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை முடிவு செய்து விட்டார்! சேய்த்தொண்டர் புராணம் பாட வல்ல வரகவி சொக்கலிங்கனாரே என்று அசைவில்லாத நம்பிக்கை பூண்டு தான் முன்பின் பார்த்தறியாத சொக்கலிங்கனாருக்குக் கடிதம் மூலம் தமது வேண்டுகோளை விடுத்தார். தொண்டுக்கென்றே பிறந்த சொக்கலிங்கனாரும் உடனே அப்பணியை ஏற்று ஓராண்டில் நிறைவேற்றித் தந்தார். பணி தொடங்கியது 1941-ஆம் ஆண்டு. 1942 - ல் மிக அழகிய முறையில் பத்திச்சுவை நனி சொட்டச் சொட்ட சேய்த்தொண்டர் புராணம் தமிழ்நாட்டின் தவப்பயனாய் முகிழ்த்துவிட்டது.

இந்நிகழ்வுகளில் கூர்ந்து கவனித்தால் ஓருண்மை திருவருள் அதில் ஒளித்து வைத்துள்ளது புரியும். தேனூர் வரகவி சொக்கலிங்கனார்   தீவிர மணிவாசகப்  பித்தர். அவர் மணிவாசகர் உலா பாடியிருந்தால் அதில் வியப்பில்லை. ஆனால் அவர் பாடி வெளியிட்டதோ சுந்தரர் உலா’. சுந்தரர் திருத்தொண்டத்தொகை பாடுவதற்காகவே அவதரித்தவர் என்று பெரியபுராணம் கூறுகிறது. அது போல் சொக்கலிங்கனார் பின்னால் சேய்த்தொண்டத் தொகைபாடுவதற்கென்றே சுந்தரரிடம் ஆசியும் ஆற்றலும்  பெறவே  போலும்  சுந்தரர் உலாபாடியருளினார். இந்தத் திருவருளைப் புரிந்து கொண்டு தான் போலும் தணிகைமணியார் இவரிடம் சேய்த் தொண்டர் புராணம் பாடப்பணிந்து வேண்டினார்.

 இவ்வாறாக மதுரைச் சொக்கலிங்கம் நல்லதொரு வேண்டுகோளுக்கு இரங்கி களவியல் நூல் அருளியது போல, தேனூர் சொக்கலிங்கம் நல்லதொரு  வேண்டுகோளுக்கு இணங்கி சேய்த் தொண்டர் புராணம் அருளினார்.

 தேனூரின் சொக்கனும் தென்மதுரைச் சொக்கனும்

ஆனால் இருவரும் ஒவ்வுவரே - மானே

ஒருவன் களவியல் நூல் சேய்த்தொண்டர் நூலை

ஒருவன் உவந்தளித்த தால்.

           என்று பாடிப் பரவ வேண்டும் என்று தோன்றுகிறது.

பெரியபுராணம் பாடிய சேக்கிழாரும் ஓராண்டில் அதனை முடித்தார் என்று அறிகிறோம். அதே போல தேனூர் சொக்கலிங்கனாரும் சேய்த் தொண்டர் புராணத்தை ஓராண்டில் முடித்திருக்கிறார்.

சேக்கிழாருக்கு இல்லாத பல முட்டுப்பாடுகள் தேனூர் சொக்கலிங்கனாருக்கு உண்டு. சேக்கிழாருக்கு பெரிய புராண அடியார்கள் பற்றிய குறிப்புகளைக் கொடுக்க சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும் இருந்தன.

தேனூராருக்கு இவை இரண்டும் இல்லை. அதோடு சேக்கிழார் முதலமைச்சராய் இருந்ததால் தனக்குக் கிடைத்த அடியார்களைப் பற்றிய தகவல்களை ஊர் ஊராகச் சென்று சரி பார்த்துக் கொள்ளும் வசதி இருந்தது. தேனூராருக்கு அதுவும் இல்லை.

எனவே முருகனடியார்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதை  இவரே செய்ய வேண்டி இருந்தது. அதன்பின் சேய்த்தொண்டத்தொகை ஒன்றும், சேய்த்தொண்டர் திருவந்தாதியும் பாடி அவற்றை விரித்து சேய்த்தொண்டர் புராணத்தை 3333 பாடல்களில் பாட வேண்டி இருந்தது. ஆக, எல்லாத் தகவல்களும் இவருக்கு முருகன் இதயத்தில் திருவடி பதித்து பத்தியையும், மூளையில் திருவடி பதித்து பாடும் ஆற்றலையும் ஊட்டிட இவர் அருளியது தான்  இந்த சேய்த்தொண்டர் புராணம் என்னும் போது நமது கண்கள் வியப்பால் அகல விரிகின்றன!

சேய்த்தொண்டத் தொகை பாடி அதன்பின் சேய்த்தொண்டர் புராணம் பாடுங்கள் என்று இவருக்குக் குறிப்பு கொடுத்ததும் தணிகை மணி செங்கல்வராய பிள்ளை தாம் என்று அறிகிறோம்.  இவையெல்லாம் முருகனருளால் தான் நடைபெறுகின்றன என்பதற்கு இலை மறை காய் மறையாகப் பல சான்றுகள் கிடைக்கின்றன.

சற்று சிந்தித்துப் பார்த்தால் ஓர் உண்மை புலனாகும். இந்தத் தொடரை தெய்வமுரசில்(http://dheivathamizh.org) ’ எழுதத் தொடங்கியதே திருத்தணியில் ஆறாவது உலகச் சேக்கிழார் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்னர் தான் என்பது இதழ் வாசகர்கள் அனைவரும் அறிந்ததே.

சிவனடியார்களின்  வரலாற்றை உலகறிய விரித்துரைத்த சேக்கிழார் மாநாட்டினை எனது தாழ்வரையில் நடத்த வந்துள்ளீர்கள். நன்று, இதை வெற்றிகரமாக நடத்தித் தருகிறேன். இதையொட்டி நமது அடியார்களின் வரலாறுகளை இனி உலகறிய விரித்துரைப்பீர்களாக என்று திருத்தணிகை முருகன் தெய்வமுரசைத் தூண்டி விட்டான் என்றே உளமாரக் கருதுகிறேன்.

இதையொட்டி மளமளவென முயற்சிகளை மேற்கொண்டதில் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்களின் புதல்வி திருமதி வி.சி.சசிவல்லி அவர்கள் மற்றும் தேனூரார் பேரன் சிவத்திரு மா.திருவாசகம் அவர்கள் ஆகியோரின் தொடர்பும் அவர்களின் நூல்களும் கிட்டின. அவற்றைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு சேய்த்தொண்டர் புராணத்தைத் தொடங்குகிறோம். இது முருகனடியார்களுக்கும் முழுத்தமிழ் ஆர்வலர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். திருத்தொண்டத் தொகை திருவாரூரை அடியிட்டுப் பாடப்பெற்றது. ஆனால், சேய்த்தொண்டத் தொகையோ பாடியவர் தேனூரைச் சேர்ந்தவராய் இருந்தாலும், திருத்தணிகையை அடியிட்டுப் பாடப்பெற்ற நூல். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக்காளேஎன்று முடியும்.

ஆக சேக்கிழார் பாடியருளிய அடியவர் வரலாறுகளை எமது திருத்தணியில் மாநாடு நடத்திச் சிறப்பித்தீர்கள்; எம் திருத்தணியில் தொடர்பு கொண்ட எமது அடியார்களின் புகழையும் விரித்துக் கூறுங்கள் என்று திருத்தணி முருகனே கட்டளை இட்டது போல உணர்கிறோம். முதலில் சேய்த்தொண்டத் தொகையைப் பதிவு செய்வோம்.

 

Comments are closed.

சிந்தனைப் பட்டறை brought by dheivathamizh.org