முருகவேள் பன்னிரு திருமுறைத் திரட்டு (2) :: செந்தில் வாழ் அந்தணர்கள்::
முருகவேள் பன்னிரு திருமுறைத் திரட்டு (2) ::
செந்தில் வாழ் அந்தணர்கள்::
சென்ற இதழில் தேனூர் வரகவி சொக்கலிங்கனார் சேய்த்தொண்டர் புராணம் பாடியருளிய வரலாற்றினைக் கண்டோம். இனி, இவ்வினிய புராணத்துள் நுழைவோம். நுழையுமுன் ஆசிரியரின் பெயரை இனி தேனூரார் என்றே குறிப்பிடுவோம். இதற்கு காரணங்கள் இரண்டு
1) இவர் பாடிய பாடல்கள் தேனை நிகர்த்தவை என்று உணர்த்த
2)இவர் நெஞ்சில் வைத்துப் போற்றிய மணிவாசகரை அவரது ஊரைக் கொண்டு வாதவூரர் என்பது போல இவரையும் இவரது ஊரைக் கொண்டே குறிக்க.
தேனூரார் சேய்த் தொண்டத் தொகையிலும், புராணத்திலும் “செந்தில் வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்குகிறார். எப்படி திருத்தொண்டத்தொகை “தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்குகிறதோ அது போல தேனூரார் செந்தில் வாழ் அந்தணர்களில் இருந்து தொடங்குகிறார்.
தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரவர் என்பர். இங்கே செந்தில் வாழ் அந்தணர்கள் ஈராயிரவர் என்று தேனூரார் குறிக்கிறார். இவர்களுக்கு திரிசுதந்திரர் என்ற பெயரும் உண்டாம். முக்காணியர் என்று தமிழில் கூறுவர். இம்மை, மறுமை, அம்மை ஆகிய மூவுலகங்களிலும் திரியும் சுதந்திரம் உடைவர் என்பது பொருள்.
இந்தச் செந்தில் வாழ் அந்தணர்கள் எப்போது செந்திலுக்கு வந்தார்கள்? செந்திலுக்கு எப்போது கந்தன் வந்தானோ அப்போது எனக் கொள்க. செந்திலுக்குக் கந்தன் எப்போது வந்தான் என்று யாருக்குத் தெரியும்? தேனூரார் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
முருகனோ பரம்பொருள். அவன் இல்லாத இடம் எதுவும் உண்டா? இருக்க முடியாது, எனவே முருகன் செந்திலுக்கு வந்தான் என்பதே தந்துரை எனப்படும் உபசார உரை ஆகும். புராண நிகழ்ச்சியைக் கூறுவதற்கு வசதியாகக் கட்டிக் கூறியது.
அதனைக் குறிப்பில் வைத்து, உலகெலாம் தொழும் குகன் ஆலயத்தில் திருச்செந்தூர் என்று தொடங்குகிறார். பாடல் வருமாறு :
உலகெலாம் தொழும் குகன் உறையும் ஆலயம்
அலகிலா தனஉள அவைக்கெலாம் ஒரு
திலகமாய் மிளிர்வது திருச்செந் தூர்அவண்
குலவுசேய் பதநறும் குமுதம் ஆடுவாம்.
எப்படி பெரிய புராணம் “உலகெலாம்” எனத் தொடங்குகின்றதோ, அப்படி சேய்த் தொண்டர் புராணத்தையும் “உலகெலாம்“ என்றே தொடங்குகிறார் தேனூரார்.
இறைவன் எங்கும் உறைபவன்; அவனுக்கு மனிதர் தொழும் ஆலயங்கள் தாம் பின் வந்தன. இதனை தேனூரார் இவ்வாறு குறிப்பிடுகிறார். “உலகெலாம் தொழும் குகன் உலகெலாம் உறையும்; (அவற்கு) உலகெலாம் ஆலயம் அலகிலாதன உள”, என்ற கொண்டு கூட்டிப் பொருள் காணுமாறு தேனூரார் பாடிய அழகு இறை
இலக்கணத்திற்கும், தருக்க இயல் எனப்படும் அளவை இயலுக்கும் பொருந்தி வருவது காண்க.
இவ்வாறு உலகெலாம் உள்ள முருகன் ஆலயங்களில் திருச்செந்தூர் ஆலயம் திலகம் போன்றது என்று அதன் சிறப்பு தோன்ற கூறினார். யாண்டும் நிறைந்த பரம்பொருளான முருகனுக்கு திருச்செந்தூரில் அன்பர்கள் ஆலயம் கட்டினார்கள். அன்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க அங்கே முருகன் உறைந்து நின்றவண் விளங்கி நின்று குலவினான் என்றார். குலவுதல் இங்கே விளங்கித் தோன்றல் என்பதைக் குறித்தது. அவ்வாறு இக்கோயிலில் குலவி நிற்கின்ற முருகனின் இருபதங்களையும் வணங்கிக் கொள்கிறேன் என்று புராணத்தைத் தொடங்குகிறார் தேனூரார்.
இதனால் நமக்கு ஓர் உண்மை தெரிகிறது. சிவனடியார்களுக்கு எப்படி தில்லையோ அதுபோல முருகனடியார்களுக்கு திருச்செந்தூர் என்பதை
உணரப் பாடினார்.
திருச்செந்தூர் முருகனின் ஆலயங்களில் எல்லாம் தனிச்சிறப்பு உடையது என்கிறார். உண்மை தான்! முருகனின் ஆறுபடை வீடுகளில்
அது ஒன்று. அங்கே பெரிய மலையில் கோயில் இல்லை; கடற்கரையில் கோயில் உள்ளது; அதனால் அது அலைவாய் எனப்பட்டது. பிறவியாகிய கடலில் வினைகளாகிய துன்ப அலைகளில்
அலைவாய்! என உயிர்களை விளித்து அத்துன்பம் நீங்கி வீடு பேறாகிய சீரில் இனி அலைவாய் என்று முருகன் கூறுவது போல அமைந்ததால் அதற்கு திருச்சீரலைவாய் என்று பெயர் வந்ததாக பெரியோர்கள் கூறுகின்றனர்.
கோயில் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றது; கடற்கரையில்
கட்டப்பட்டிருக்கின்றது. மணலில் அஸ்திவாரம் என்று தற்போது கூறுகிற அடிப்படையைப் போட்டால் அது மணலில் புதையாமல்
நின்று நிலைப்பதே ஓர் அதிசயம். போதாததற்கு அந்தக் கோயில் கட்டுமானக் கற்கள் கணந்தோறும் உப்புநீர் காற்றில் பட்டுக கொண்டிருப்பதால் விரைவில் அரித்து விடும்.
இவ்வாறு புதைகிற மணலில் அரிப்புக் காற்றுக்கிடையே இன்ன காலம் என்று வரையறை செய்ய இயலாத பழங்காலத்தில் இருந்து இக்கோயில் நின்று நிலவுவதே எவ்வளவு பெரிய அதிசயம்! அதற்கும் மேலாக 2004-ஆம் ஆண்டில் ஆழிப் பேரலை கடற்கரை ஓர ஊர்களை எல்லாம்
சின்னாபின்னப்படுத்திய போது இக்கோயிலை மட்டும் ஆழிப்பேரலை வலம் வந்து சென்றது என்று செய்தித்தாள்களில் செய்தி வந்ததை யாவரும் அறிவார். இது அதிசயத்திலும் அதிசயம் அல்லவா?
எதையும் தாங்கும் அளவில் இக்கோயிலைக் கட்டிய தமிழர்களின் தொழில் நுட்பத்தை வியப்பதா, இயற்கையே இக்கோயிலை வலம் வந்து சென்றதை வியப்பதா என்று இக்கோயில் பற்றி நமது வியப்பும்
பெருமிதமும் ஓங்கிக் கொண்டே செல்வதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
இத்தனை சிறப்புகளை உடைய திருச்செந்தூர்க் கோயிலை தேனூரார் திருமுருகன் ஆலயங்களில் எல்லாம் திலகம் என்றது சரிதானே!
சரி! திருமுருகன் திருச்செந்திலுக்கு வந்து நின்றது எப்படி என்று புராணம் கூறுவதைக் கேட்போம்!
தேவர்கள் எல்லாம் சூரபதுமன் என்னும் கொடியவன் செய்கிற அட்டூழியங்களினால் படும் அவதியை கயிலாயத்தில் உள்ள சிவபெருமானிடம் முறையிடுகிறார்கள். அவர்களிடம் அஞ்சேல் என்று ஆறுதல் கூறி சிவபெருமான் கந்தப்பெருமானை அழைத்து சூரபதுமனை அடக்கி தேவர் குறை தீர்ப்பாய் என்று கட்டளை இடுகிறார்.
முருகன் அதைச் சிரமேற்கொண்டு கயிலாயத்தில் இருந்து படைகளுடன் பயணம் மேற்கொள்கிறார். வழியில் திருச்சேய்ஞலூரில் ஒரு நாள் தங்கி பெருமானை வணங்கி விட்டு திருச்செந்தூருக்கு வந்து தங்குகின்றான். அங்கே மயன் என்னும் தேவதச்சன் எழில்மிகு மண்டபத்தை அமைத்தான் என்று புராணம் கூறுகிறது. அது தான் திருச்செந்தூர் ஆலயமாகி இருக்க வேண்டும்.
அந்த ஆலயத்தில் அந்தணர்கள் புடை சூழ்ந்து முருகனை ஏத்தி வணங்கினர். இவர்கள் தாம் ஈராயிரவர் என்னும் முக்காணியர்
என்று தேனூரார் சில பாடல்களைப் பாடி விளக்குகிறார். காணி என்பது நிலத்தைக் குறிக்கும். முக்காணி என்பது மூவுலகத்தைக் குறிக்கும். ஆக மூவுலகத்திலும் தம்மைக் கட்டுப்படுத்துவாரின்றித் திரியும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதால் வடமொழியில் திரிசுதந்திரர் என்றும் மூவுலகங்களுக்கும் உரியவர் என்று தமிழில் முக்காணியர் என்றும் கூறப்பட்டனர்.
இந்த மூன்று காணிக்கும் உரியவர் முக்காணியர். இம்மூவுலகங்களில் சுதந்திரமாகத் திரியக் கூடியவர்கள் ஆதலால் திரிசுதந்திரர்.
மூவுலகங்களாவன:
1) இம்மையாகிய மனிதர் வாழும் இந்நிலவுலகம்
2) மறுமையாகிய தேவர்கள் வாழும் நிலவுலகத்திற்கு மேல் உள்ள மேலுலகம்
3) அம்மையாகிய இறைவன் திருவடிக்கு அண்மையில் உள்ள உலகம் (சாலோகம்)
இம் மூவுலகிலும் திரியக் கூடியவர்கள் சித்தர்கணத்தைச் சேர்ந்தவர்கள். இந்தச் சித்தர்கணத்தை தாயுமானவர் அறிமுகப்படுத்தும் பாடல் ஒன்று இங்கு நினைக்கத்தக்கது:
திக்கொடு திகந்தமும் மனவேக மென்னவே
சென்றோடி ஆடிவருவீர்
செம்பொன் மக மேருவொடு குணமேரு என்னவே
திகழ்துருவம் அளவளாவி
உக்ரமிகு சக்ரதரன் என்னநிற் பீர்கையில்
உழுந்தமிழும் ஆசமனமா
ஓரேழு கடலையும் பருகவல்லீர் இந்திரன்
உலகும் அயிரா வதமுமே
கைக்கெளிய பந்தா எடுத்துவிளை யாடுவீர்
ககனவட் டத்தை யெல்லாம்
கடுகிடை இருத்தியே அட்டகுல வெற்பையும்
காட்டுவீர் மேலும் மேலும்
மிக்கசித் திகளெலாம் வல்லநீ ரடிமைமுன்
விளங்கவரு சித்திஇலிரோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே.
இந்தச் சித்தர்கணம் எங்கும் திரிய வல்லவர் என்பது போல செந்தில் வாழ் அந்தணர் எனப்படும் முக்காணியரும் எவ்வுலகிலும் சுதந்திரமாகத் திரிய வல்லவர்கள் என்பதால் தான் அவர்கள் திரிசுதந்திரர் எனப்பட்டனர். எனவே இத் திரிசுதந்திரர்கள் சித்தர்கள்.
இந்தச் சித்தர்களை அந்தணர் என்று குறிப்பிட்டனர் பெரியோர். அந்தணர் என்பவர் ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர். அந்தணர் என்பர் அறவோர்;அதோடு மற்றெல்லாவுயிர்க்கும் ஒரு துன்பமும் விளைவிக்காத செந்தண்மை உடையவர்கள். ஆக முருகனை திருச்செந்தூரில் சூழ்ந்து போற்றிய ஈராயிரவர், சித்தர்களாகிய அந்தணர் என்று அறிக. முருகன் சித்தர்களால் சூழப்பட்டவன் என்பதை அருணகிரியார் பாடிய சித்துவகுப்பால் அறிக.
இவர்களைத் தான் தேனூரார் செந்தில் வாழ் அந்தணர்கள் என்று
கூறி அவர்களுக்கு அடியேன் என்று சேய்த்தொண்டர் புராணத்தைத் தொடங்குகிறார்.
இவர்கள் “அறைதமிழ் மொழிவடிவழகன்” என்று தேனூரார் கூறும்
முருகனை வணங்கியதால் தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதை அறியலாம்.
இந்த அந்தணர்கள் ஏதோ ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் படிப்போர்க்குத் தோன்றிவிடக் கூடாது என்று மிக எச்சரிக்கையாகத் தேனூரார் பாடிய பாங்கு போற்றத்தக்கது.
இந்த அந்தணர்கள் மார்பில் என்ன இருந்தது என்று சொல்ல வந்தவர் அவர்கள் மார்பில் உருத்திராக்க மாலை இருந்தது என்றாரே ஒழிய பூணூல் இருந்தது என்று கூறாதது உன்னி நோக்கி உவக்கத் தக்கது.
“உருத்திர மாமணி ஒளிகொள் மார்பினர்
தெரிந்திடு குகப்புகழ் செறியும் வாயினர்“
என்பது அவரது வாக்கு.
இந்த செந்தில் வாழ் அந்தணர்களின் பெருமையை எல்லாம் சில பாடல்களில் வரிந்து
கட்டிக்கொண்டு வருணித்திருக்கிறார். அதனைச் சுருக்கமாக இங்கே காண்போம்;
இந்த அந்தணர்கள் நூல்களையும் கலைகளையும் விரும்பிக் கற்றவர்கள்; தானமும் தவமும் நன்கு செய்யத் தக்கவர். இவர்கள்
(சித்தர்களாதலால்) நடக்கப் போவதை எல்லாம் அறிந்தவர்கள்; மானமே உயிரென மதிக்கும் பெருமையை உடையவர்கள்.
இவர்கள் குற்றமற்ற மரபைச் சார்ந்தவர்கள்; கல்வியிற் சிறந்தவர்கள்; உலக மக்கள் எல்லாம் நலம் பெறுவதற்கு வேண்டிய நல்லன எல்லாம் செய்யும் மேலானவர்கள்.
இவர்கள் நான்கு வேதங்களையும் (அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேதங்களை) கற்றுணர்ந்தவர்கள்; இலக்கியங்களை
நுட்பமாகக் கற்றறிந்தவர்கள்; ஆன்மா நல்வழிப்படுவதற்கு ஏற்றவற்றை உணர்ந்தவர்கள், நல்லனவற்றையே நாடும் மேலானவர்கள்.
இவர்கள் அந்தணர்களுக்கு உரிய தொழிலாகிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல் முதலிய ஆறு தொழிலையும் செய்து இந்த உலகினை வழிப்படுத்துபவர்கள்; எப்பொழுதும் இந்த உலகில் சைவ நெறி தழைத்திட வேண்டி மந்திர முறைகளை மேற்கொண்ட சிறப்பினை உடையவர்கள்.
இவர்கள் செந்தமிழ்ப் புலவர்களிடம் கருணை காட்டும் விமலனாகிய செந்தில் ஆண்டவனின் ஆலயத்தில் வேண்டிய பணிகளை எல்லாம் இனிதாகச் செய்து வழி வழித் தொண்டர்களாய் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள். இவர்கள் தினமும் கதிரவன் எழுமுன் எழுந்து நீராடி பூசைக்குரிய நறுமண மலர்களைத் தெரிந்தெடுத்து இறைவனுக்கு அணிவித்துப் போற்றிப் பரவிடும் மங்கலமான இந்த அருந்தொழிலைச் செய்து வாழ்பவர்கள்.
இவர்கள் முத்தமிழ் வளர்த்து வேள்வி செய்பவர்கள்; சமய நெறிகள் உலக முழுவதும் தழைத்தோங்க நலனைச் செய்து வருபவர்கள்; செந்திலாண்டவனையே வணங்கி மகிழ்ச்சிக் கடலில் மூழ்குபவர்கள்.
இவர்கள் வறுமையில் வாடினாலும் உண்மை நெறியிலிருந்து சிறிதும் விலக மாட்டார்கள்; ஆறுமுகக் கடவுளின் திருவடிகளைப் போற்றி பெறுவன எல்லாம் இறைவனது திருவருளாலே என்பார்கள்; இம்மை மறுமைக்கு வேண்டிய பயன்களை நாடித் தவம் செய்பவர்கள்;
இவ்வாறு இவர்களின் பெருமைகளை எல்லாம் தொகுத்துக் கூறியவர், இறுதியில் முருகப்பெருமான் இவர்களுக்கிடையே தானும் ஒருவன் என்று கூறியதாகக் கூறுகிறார். இதை இவராக கூறவில்லை. தில்லை நடராசன் அந்த அந்தணர்களில் தானும் ஒருவன் என்று
கூறியதாக கோயிற் புராணம் கூறுவது போல்,செந்திலாண்டவன் தன்னை முக்காணியர்களில் ஒருவன் என்றதாக திருச்செந்தூர்ப் புராணம் கூறுகிறது.
ஆயிரம் இரட்டியுள அந்தணர்கள் நீவிர்
மேயஅதில் நாமொருவர் என்றுரை விளம்பி
தாயினும் இரங்கிஎளி யேன்தனை அளிக்கும்
சேயுள மகிழ்ந்துதிரு வாய்மலர்வ தாளான்
என்பது திருச்செந்தூர்ப் புராணம் பாடிய வென்றிமாலைக் கவிராயர் வாக்கு.
கோயிற்புராணம் பாடிய உமாபதி சிவம் எப்படி தீட்சிதர்களிலே ஒருவரோ அப்படி செந்தூர்ப்புராணம் பாடிய வென்றிமாலைக் கவிராயர் முக்காணியரில் ஒருவர் என அவரது வரலாறு கூறுகிறது.
இதெல்லாம் ஒரு தந்துரை என்னும் உபசார உரையே தவிர உண்மை உரை என்று கொள்ளுதல் கூடாது. தமிழுக்குச் சங்கம் கண்ட
சிவபெருமான் சங்கப் புலவர்களில் தானும் ஒருவனாக இருந்து தமிழாய்ந்தான் என்பது போல இதுவும் ஓர் உபசார உரை என்க. அத்துணை விழுமியவர்கள் என்பது அதன் பொருள்.