சென்னை சைதை தர்மராஜா கோயில் தெரு 24- 12-2010 அன்று காலை 7.00 மணியிலிருந்தே பரபரப்பு பூண்டது. சாரி சாரியாக மக்கள் சென்று கொண்டிருந்தனர். என்ன விசேஷம்? என்று ஒருவரைக் கேட்டோம்.
என்ன தெரியாதா 20 – ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா பத்மாவதி திருமண மண்டபத்திலே நடக்கிறதே!
உங்களுடன் பேச நேரமில்லை; இதோ விழாவைத் தொடங்கி விட்டார்கள்; நான் உள்ளே போக வேண்டும் – அவர் அவசரம் அவசரமாக உள்ளே போனார்.
நாமும் பின்தொடந்தோம்.
அங்கே ஒருவர் திருவிளக்கு ஏற்றி கொண்டிருந்தார். அவர் தான் இந்த திருமண மண்டபத்தின் உரிமையாளராம்! பெயர் திரு.P.M. ஜெயச்சந்திரனாம்.
வருடா வருடம் இந்த மண்டபத்தை திருமந்திர விழாவிற்கு இலவசமாக அளிக்கிறாராம். என்ன பெருந்தன்மை என்று அவரை கூட்டத்தினர் பாராட்டிக் கொண்டிருந்தனர்.
உடன் இன்னொரு பெண்மணியும் விளக்கேற்றினார்; பெயர் திருமதி. சங்கராந்தி சீனிவாஸ் என்றார்கள்; தெய்வமுரசு இதழின் பதிப்பாசிரியர்க்கு கணினி அச்சில் உதவி பெரும்பங்கு
ஆற்றுபவராம். தெய்வமுரசு இதழ் ஆசிரியர் அவர்கள் இருவரையும் பாராட்டிச் சில சொல்ல கூட்டத்தினர் கரவொலி எழுப்பினர்.
இதோ, ஆசிரியர் மதுரை ஆதினம் 291 – ம் பட்டம் தெய்வத்திரு சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், வாரியார் சுவாமிகள், திருமூலர் ஆகிய
திருவுருவப் படங்களுக்கு நல்ல தமிழில் வழிபாடு செய்ய விழா தொடங்கியது.
திரு.V.வெங்கடேசன் ஓதுவார், திருமதி கற்பகவல்லி ஆகிய இருவரின் திருமுறை இன்னிசை தான் விழாவின் முதல் நிகழ்ச்சி. அந்தத் தேவார இன்னிசை தேமதுரமாக இனித்தது.
அடுத்து விழாவை எடுக்கும் சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப் பண்பாட்டு ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் திரு.பழ. முருகேசன் தலைமை தாங்க, அண்ணா பல்கலைக்கழக மேனாள்
துணை வேந்தர் முனைவர் ஆ. கலாநிதி அவர்கள் சிறந்ததொரு தொடக்கவுரையாற்ற தெய்வமுரசு ஆசிரியர் நெறிப்படுத்த கூடியிருந்த திரளான கூட்டத்தினர் அவருடன் இணைந்து திருமந்திரத்தின் பகுதியான
எட்டாம் தந்திரத்தை அதாவது 500 – க்கு மேற்பட்ட பாடல்களை பத்திமை பொதுள. முற்றுமாக ஓதி முடிக்கும் போது பகல் 1.30 மணி ஆகிவிட்டது. இடையிடையே ஆசிரியர் அளித்த சின்ன சின்ன பாடற்குறிப்புகள் செவிக்கினிதாய் சிந்தைக் கினிதாய் அமைந்தது. திரு.மு.பெ. சத்தியானந்தம் நன்றியுரை வழங்கினார்.
உண்மையில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் கூட்டம் அதிகம் என்று ஒரு சேர எல்லோரும் கூறினர். உண்மை! அரங்கு கொள்ளாத கூட்டம் தான்!.
பிற்பகல் இசை விருந்து. திரு.சு.கதிரேசன், திரு.ப.சற்குருநாதன் , திருமதி. வள்ளி உமாபதி, பெரும்பாண நம்பி திரு ம.கோடிலிங்கம், அருட்பா இசைத் தென்றல் திரு எஸ். ரமேஷ¢ ஆகியோர் உள்ளம் உருகும் பாடல்களை உணர்வினிக்கப் பாடினார்கள். நேரம் சென்றதே தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்திறமை உடையவர்களாய் இசை விருந்தளித்தனர்.
இசைவிருந்தை அடுத்து திரைப்பட நடிகர் தாமு அவர்களின் பலகுரல் கலையும் தியானமும் என்ற நிகழ்ச்சி தொடங்கியது. இந்த வருடம் இது ஒரு தனிச் சிறப்பு நிகழ்ச்சியாக நடந்தது.
குரல்வளையை வளைத்து எப்படியெல்லாம் வெவ்வேறு குரல்களைக் கொண்டு வரலாம் என்று அவர் விஞ்ஞான நீதியாக விளக்கியது அனைவர் கருத்தையும் கவர்ந்தது. சிங்கம் போல கர்ஜ¤த்துக் காட்டி அதனருகாக திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் குரல் எப்படி வருகிறது என்று காட்டிய போது அரங்கம் அதிர்ந்தது. இப்படியே ஒவ்வொரு நடிகரின் குரலும் எங்கெங்கே பிறக்கின்றது என்று அவர் காட்டக் காட்ட பலகுரல் கலையின் பல பரிமாணங்களை அவையினர் புரிந்து வியந்தனர். இந்த ஒலிகளுக்கெல்லாம் அவர் குறியீடு செய்து ஒரு ஒலிக் குறியீட்டிலிருந்து மற்றொரு ஒலிக் குறியீட்டிற்கு எப்படிச்செல்வது என்பதற்கு சூத்திரங்களை (formula) அமைத்து அக்கலையை அவர் விஞ்ஞான மயமாக்கி உள்ளார் என்பதைக் கேட்டும், அதற்காக அமெரிக்க இல்லினாயிஸ் பல்கலைக் கழகம் அவரை அழைத்துப் பாராட்ட இருக்கிறது என்பதை அறிந்தும் கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பினர்.
ஒலிகளைக் காட்டி ஓங்காரம் ஒலித்து அப்படியே தியானத்திற்கு அவர் அழைத்துச் சென்றது அவரது அரும் பெரும் திறனைக் காட்டியது. மக்கள் மெய்ம்மறந்து போயினர். அப்புறம் நினைவு படுத்தியவுடன் பலத்த கரவொலி எழுப்பினர். அவர் திறம் வாழ்க!
இதையடுத்து மிகச் சிறந்த வழக்காடு மன்றம் நடந்து. குடியாத்தம் சொல்லின் செல்வர் சீனி சம்பத் நடுவராயிருந்து சிறக்க நடத்தினார். தலைப்பு – கொள்ள வேண்டிய தமிழை வழ¤பாட்டில் தள்ளி வைத்துள்ளது தமிழ்ச்சமூகத்தின் கடுமையான குற்றம். திரு த. கோ. சதாசிவம் வழக்கு தொடுத்து வாதங்களை வைத்தார். திருமத¤ அ. சங்கீதா எதிர் வாதுரையை மிகத் திறம்பட வைத்தார். பாங்கறிந்து பட்டி மன்றத் தலைவர் அதை நடத்திச் சென்றது அவர் இத்துறையில் எத்துணை பலம் வாய்ந்தவர் என்பதைக் காட்டிற்று. தமிழ்வழிபாட்டிற்கு ஆதரவாக அவர் தீர்ப்பு அளித்தபோது அரங்கம் ஆர்ப்பரித்தது.
மேல் முறையீட்டில் நடுவராக ஆசிரியர் தீர்ப்பளித்த போது தமிழ் வழிபாட்டின் பெருமைகளை அவருக்கே உரித்த பாணியில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் காட்டித் தமிழுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த போது பொன்மலர் தீர்ப்பில் புதுமணம் பாய்ந்த உணர்வுடன் மக்கள் எழுச்சி கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திரு இரா. உமாபதி நன்றி கூறினார்.
முன்னாள் நிகழ்ச்சிகளின் சுவையைத் தேனிப்பு செய்தவாறு இரண்டாம் நாள் 25-12-2010 அன்று மக்கள் பெருந்திரளாகத் கூடினர். அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை ஆதலால் கூட்டம் முதல் நாளைவிட இரட்டிப்பாயிற்று.
எட்டாம் தந்திரக் கருத்தரங்கம் காலை 10.00 மணிக்குத் தொடங்கியது தனது திறம் சான்ற ஆய்வுரையுடன் சித்தயோக மருத்துவர் திரு.அன்புகணபதி கருத்தரங்கைத் தொடக்கி வைத்தார். முனைவர் அரங்க இராமலிங்கம் தலைமை தாங்கி எட்டாம் தந்திரத்தின் முக்கியமான 25 பாடல்களைச் சுட்டிக் காட்டி தலைமையுரை யாற்றினார். அடுத்து முனைவர் சி.வெ. சுந்தரம் உரையாற்றும் போது அன்புகணபதி அவர்களும், ஆசிரியரும் விஞ்ஞான ரீதியான விளக்கங்களை திருமந்திரத்திற்கு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அவரைத் தொடர்ந்து திரு. கோ.சண்முகம் சிறப்புரையாற்றினார். அவர் உரையின் போது 274 திருத்தலங்களின் பெயர்களையும் மூச்சு விடாமல் ஒப்பித்தபோது உண்மையிலேயே சைவ அன்பர்கள் உள்ளமெல்லாம் குதூகலித்தது.
ஆசிரியரின் திருமகனார் திரு.ச.திருச்சுடர் நம்பி உரையாற்றினார். அவர் எட்டாம் தந்திரத்திலேயே கடுமையான பகுதியான ஆறந்தம் தலைப்பினை எடுத்துக் கொண்டு இரும்புக் கடலையைத் தம் சொற்றிறத்தால் இளக்கி இனிய சுண்டல் செய்து வழங்கினார் என்றே கூற வேண்டும் Ôவளர்க இந்த இளைஞரின் வாக்கும் வாழ்வும்!’ என அவையினர் அனைவரும் வாழ்த்தினர்.
கருத்தரங்கின் இறுதியில் சித்தாந்தச் செல்வர் பேராசிரியர் மு. செல்வநாதன் குறைந்த நேரத்தில் ஒரு பாடலை மட்டும் எடுத்து விளக்கி, Ôஅடடா! இவருக்கு நேரமில்லாமல் போயிற்றேÕ என்று ஏங்கும்படி உரையாற்றி அமர்ந்தார். திரு.எஸ்.நாகரத்தினம் நன்றியுரை கூற கருத்தரங்கு இனிதே நிறைவேறியது.
தெய்வமுரசு பதிப்பாசிரியர் திரு. பா.சீனிவாஸ் வரவேற்புரை வழங்க, ஆறாம் அமர்வு பள்ளிச் சிறார்களின் திருமந்திரம் மனனப்போட்டி பரிசளிப்பு விழாவாக நடந்தது குழந்தைகள் திருமந்திரத்தைத் தெளிவாக உச்சரித்துப் பல பாடல்களை வழங்கியது இந்த முற்றோதல் விழாவின் சிகரம் என்றே சொல்ல வேண்டும். Ôஅப்பா! ஒரு நல்ல தலைமுறை உருவாகிறதுÕ என்ற மனநிறைவு எல்லோருக்கும் தோன்றியது.
இவ்விழாவிற்குத் தலைமை பூண்ட பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தரும், இந்நாள் SRM பல்கலைக் கழகத்தின் மூத்த கல்வி அதிகாரியுமான முனைவர் பொன்னவைக்கோ அவர்கள்
தமிழ் வழிபாட்டின் அருமை பெருமைகளை ஆதாரங்களுடன் பேசிய பேச்சு எழுச்சி மிகு எழிற்பேச்சு! SRM பல்கலைக்கழகத்தில் ஆசிரியரைக் கொண்டு தமிழ் வழிபாட்டுப் பட்டயப் படிப்பு ஜனவரி 2011 – ல் தொடங்குவதாக அவர் அறிவித்தபோது எழுந்த கரவொலி அடங்க நேரமாயிற்று.
அவரைத் தொடர்ந்து கொல்கத்தா தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.D.ஞானசேகரன் குழந்தைகள் பங்கு கொண்டு திருமந்திரப் பாடல்களை ஒப்பித்த விதத்தை வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் திரு. ச.மு. தியாகராசன் நன்றியுரை வழங்கினார்.
இறுதியாக திரு. தா. சந்திரசேகரன் I.A.S. மேனாள் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி திருமந்திரம் பற்றி சொற்பொழிவாற்ற விருது விழா தொடங்கியது.
அதன்பின்
திரு. வை. நாராயணசாமி
திரு. வை. பிரதாபன்
திரு. தா. சந்திரசேகர் I.A.S.(ஒய்வு)
பனையபுரம் திரு. அதியமான்
திரு. வி. பாலதேசிகன்
திரு. ம. கண்ணப்பன்
திருமதி. கற்பகவல்லி
திரு. ப.வெங்கடேசன்
திரு. அர்ஜுன் சம்பத்
திரு. பொன் சுந்தரேசன்
திரு. வாமதேவசிவம் தங்கவேலன்
திருமதி. அகிலா
திரு. ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம
திரு. குழ. கதிரேசன்
திரு. சேது சொக்கலிங்கம்
ஆகிய விற்பன்னர்களுக்கு விருதும், பொற்கிழியும் அளித்து பொன்னாடை போர்த்திச் சிறப்பு செய்யப்பட்டது.
திரு.அர்ஜுன் சம்பத், இந்துமக்கள் கட்சித் தலைவர், சைவ நன்மணி விருது பெற்று விருதாளர் சார்பாக மிகச் சிறந்த உரையாற்றி மன்றத்திற்கும் ஆசிரியர்க்கும் நன்றி கூறினார்.
திருவாவடுதுறை ஆதினம் தவத்திரு முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், திரு. பழ.முருகேசன், டாக்டர் M.K.விஸ்வேஸ்வரன், சிவநெறிச் செல்வர் திரு.ஆர். செல்வகணபதி,
மணிவாசக மணி திரு. நயினார் இராமசாமி ஆகிய பெரியோர்கள் விருது விழாவில் தத்தம் பங்காற்றிச் சிறப்பித்தார்கள். திரு பழ. பிரபாகரன் இணைப்புரை வழங்கினார்.
மன்ற அன்பர் திரு. கோடிலிங்கம் கூறியதைக் கூறி முடிக்கிறேன். இரண்டு நாள் விழா போனதே தெரியவில்லை.
ஐயா! இந்த விழாவை வருடத்திற்கு ஒரு முறை நடத்துவது போக மாதத்திற்கு ஒரு முறை நடத்த முடியுமா?
Posted in: Uncategorized
Comments are closed.